வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழா 08.09.2018 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் கந்தன் தேரேறிவந்த காட்சினை நேரடியாகவும்-உலகநாடுகளிலிருந்து  தொலைக்காட்சிகளின் ஊடாகவும் கண்டு மகிழ்ந்தனர்.

ஈழத் திருநாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகவழிபாட்டுத் தலங்களில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முக்கியமானது, தனித்துவமானது.

கோட்டை இராச்சியத்தை ஆட்சி  செய்த ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனாகிய செண்பகப் பெருமான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலப்பகுதியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

முற்காலத்தில் இலங்கையின் வடபகுதியைத் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்த போது யாழ்ப்பாண இராச்சியத்துக்கு நல்லூர் என்னும் நகரமே இராசதானியாக அமைந்திருந்தது. அக்காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் பக்திக்கும் வழிபாட்டிற்கும் உரிய ஆலயமாக இவ்வாலயம் திகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது .

சிங்கைப் பரராசசேகரன் ஆட்சிக் காலத்தில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை நடுநாயகமாகக் கொண்டு நான்கு எல்லைகளிலும் நான்கு ஆலயங்கள் கட்டப்பட்டன. வடக்கே சட்டநாதர் கோயிலும், கிழக்கே வெயிலுகந்தப் பிள்ளையார் கோயிலும், தெற்கே கைலாசநாதர் கோயிலும், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயிலும் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும் சிற்ப சாஸ்திர விதிக்கமையவும் மாற்றியமைத்து இன்றைய நிலைக்குக் கொண்டு வர வித்திட்டவர் நல்லைநகர் நாவலர்.

ஈழத் திருநாட்டிலே கோயில் கொண்டுள்ள கதிர்காமக் கந்தனை கற்பூரக் கந்தனென்றும், சந்நிதி முருகனை அன்னதானக் கந்தனென்றும், மாவைக் கந்தனை அபிசேகக் கந்தனென்றும் அழைப்பது போல நல்லூர்க் கந்தனை அலங்காரக் கந்தனென்று அழைக்கும் மரபு நீண்ட காலமாக நிலவி வருகிறது.

இவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப்பெருமானின் திருவுருவம் வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முருகப்பெருமானுடைய ஞானசக்தியாகிய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன. இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாக விளங்கும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆலயத்தின் மேற்குப் புறமாக அமைந்துள்ளது.

ஈழத்தின் தலைசிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும் அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக்கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும் திருவீதியும் திகழ்கின்றன.

ஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் நல்லூர்க் கந்தன் ஆலயமாகும். இது ஈழத்துக் கோயில்களில் வேறெங்கும் காண முடியாத சிறப்பெனலாம்.

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள், பிரபலங்கள் மாத்திரமன்றி எந்தவொரு நாட்டின் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் ஆலயத்துக்கு வருகை தந்தாலும் குறிக்கப்பட்ட நேரத்திற்கே ஆலயம் திறக்கப்படுவதுடன் பூசை வழிபாடுகளும் வழமையாகவே இடம்பெறும். எவருக்கும் ஆலயத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.

ஆண்கள் அனைவரும் தத்தமது மேலங்கிகளைக் கழற்றி விட்டு ஆலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பது பொதுவிதி. இது ஆண்கள் எவருக்கும் பொருந்தும்.

ஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வானளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஆலய வளர்ச்சிக்கான அடையாளங்களாகவுள்ளன. ஆலயத்தின் வடக்குப் பக்கமாக இலங்கையிலேயே மிகவும் உயரமான குபேர வாசல் நவதள இராஜ கோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் 18 ஆம் நாளாகிய கார்த்திகைத் திருவிழாவன்று கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி இடம்பெற்றிருந்தது.

கடந்த 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை நட்சத்திர நாளில் இவ்வாலயத்தில் தங்க விமான கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் மூலம் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் இடம்பிடித்துள்ளது.

நாள்தோறும் இங்கு ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன. வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கந்தன் திருவடியைத் தரிசிக்க வரும் அடியவர்கள் மிகப் பலர்.

நல்லூர்க் கந்தன் மகோற்சவம் ஆவணி அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஈழத்திலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலுமே 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறுகின்றது.

மகோற்சவ நாட்களில் 55 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றுள் கொடியேற்றம்,திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாச வாகனம், சப்பறம், தேர், தீர்த்தம், பூங்காவனம் என்பன முக்கியமானவை.

ஆலய மகோற்சவ காலங்களில் பெரும் தொகையான அடியவர்கள் உள்நாட்டிலிருந்து மாத்திரமின்றி புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர். ஆலயத் தேர், தீர்த்த உற்சவ நாட்களில் ஆயிரமாயிரம் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், காவடிகள் எடுத்தும், எண்ணிலடங்கா மாதர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும், அடியழித்தும் வழிபடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைப்பன.

நல்லூர்க் கந்தன் மகோற்சவ காலத்தில் தினம் தோறும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லை ஆதீன மண்டபம், நல்லை ஆதீனக் குருமூர்த்தி ஆலய மண்டபம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், யாழ். சின்மயா மிஷன் நிலையம் ஆகிய இடங்களில் மாலை வேளைகளில் ஆன்மிக அருளுரைகளும் தெய்வீக இசையரங்கு நிகழ்வுகளும் ஆன்மீக நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

நல்லூர் தேரடிக்கு அருகாமையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மணிமண்டபம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள முத்துத்தம்பி மணி மண்டபம் என்பவற்றில் தினம் தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆலயப் புனரமைப்பு வேலைகளுக்கு எவரிடமும் பணம் தந்துதவுமாறு ஆலய நிர்வாகம் இதுவரை எவரையும் கேட்டுக் கொண்டதில்லை.

எக்காலத்திலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகோற்சவம் நடைபெறவில்லை என்ற வரலாறு கிடையாது.இன்று நடைபெறும் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux